×

தேர்தல் நடத்தை விதிமுறை அமலால்; வாகன புக்கிங் 50 சதவீதம் வரை சரிந்தது: சுற்றுலா செல்ல பொதுமக்கள் தயக்கம்

சேலம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அரசு அதிகாரிகள், போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பஸ், லாரி, கார், வேன் உள்பட பல வகையான வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனர். இந்த சோதனையால் வழக்கமாக கோடைக்காலத்தில் சுற்றுலாவுக்கு புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக சுற்றுலா வாகனங்கள் புக்கிங் இல்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலத்ைத சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. இவற்றில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவை சுற்றுலா வாகனங்கள். இந்த வாகனங்களை நம்பி உரிமையாளர்கள், டிரைவர், கிளீனர் என நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் கோடை சுற்றுலா சுறுசுறுப்படையும்.

சுற்றுலா பயணிகள் ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி, கேரளா, கர்நாடகாவுக்கு செல்வார்கள். கோடையில் இரண்டு மாதமும் இடைவெளி இல்லாமல் புக்கிங் இருந்து கொண்டே இருக்கும். கோடை சுற்றுலா மூலம் உரிமையாளர், டிரைவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. தற்ேபாது பறக்கும் படை அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகளில் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர்.

குடும்பத்துடன் சுற்றுலா செல்வோருக்கு சிரமம் ஏற்படுவதால், சுற்றுலா பயணிகள் வாகனங்களை புக்கிங் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். கோடை சுற்றுலா புக்கிங் இல்லாததால் சுமார் 50 சதவீதம் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தேர்தல் நடத்தை விதிமுறை அமலால்; வாகன புக்கிங் 50 சதவீதம் வரை சரிந்தது: சுற்றுலா செல்ல பொதுமக்கள் தயக்கம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...